ADVERTISEMENT

பட்டாசு கடை விபத்து; பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

07:33 PM Oct 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக் கடையில் கடந்த 7 ஆம் தேதி மாலை 3 மணியளவில் விற்பனைக்காக வாங்கி வந்த பட்டாசுகளை வாகனத்தில் இருந்து இறக்கிய போது தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அருகிலிருந்த மதுபானக் கடை உள்ளிட்ட 3 கடைகளிலும் தீ மளமளவெனப் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் தீ விபத்தில் பலியான 14 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

இந்தச் சூழலில் வெடி விபத்தில் சிக்கி 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் வாணியம்பாடி வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவன் தினேஷ் (வயது 17) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்தில், சிக்கி படுகாயங்களுடன் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 25) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இவ்விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT