பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளே பலர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் தீயணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்கு டெல்லியில் ராஜூரி கார்டன் பகுதியில் உள்ள 'ஜங்கிள் ஜம்போரீ' என்ற உணவகத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் உள்ள தீ விபத்து ஏற்பட்டது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விபத்தில் ஹோட்டலின் ஒரு பகுதி அதிகப்படியான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. உணவகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் சாப்பிடச் சென்றவர்கள் ஆகியோர் உள்ளே கதறிக் கூச்சலிடும் சத்தம் அங்கிருப்போருக்கு அச்ச உணர்வுவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். எதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்பொழுது வரை விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து உள்ளே இருக்கும் ஊழியர்களையும் சாப்பிடச் சென்ற 10 பேரையும் மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். அதிலும் உள்ளே சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர்கள் சிலர் தீ விபத்து காரணமாக அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு தாவித் தங்களை பாதுகாத்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. போக்குவரத்தும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.