Skip to main content

கைது செய்யப்பட்ட 12 தூத்துக்குடி மீனவர்களுக்கு 2.27 கோடி ரூபாய் அபராதம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

nn

 

கடந்த மாதம் 20ஆம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் மாலத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு 2.27 கோடி ரூபாய் அபராதம் விதித்து மாலத்தீவு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு மாலத்தீவு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீனவர்களை விடுவிப்பதாக மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது. ஆனால் படகுகளையும் மீன்களையும் ஒப்படைக்க முடியாது என தெரிவித்தனர்.

 

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில்,  பிடிபட்ட 12 மீனவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எல்லைக்குள் வந்து மீன்பிடித்தற்காக இரண்டு லட்சம் ரூபாய், வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததற்கு அதற்கு ஒரு லட்சம் என அபராதங்கள் விதிக்கப்பட்டு, மொத்தமாக 2.27 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒருபுறம் இரு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.