/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/uttamlan.jpg)
உத்தரகாண்ட் மாநிலம் லஸ்கர் தொகுதியின் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏவான பிரணவ் சிங் சாம்பியனுக்கும், கான்பூர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏவான உமேஷ்குமார் என்பவருக்கும் இடையே மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவரும் சமூக வலைத்தளங்களில் எதிரெதிரி கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிரணவ் சிங்கின் பங்களாவை, உமேஷ் குமார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரணவ் சிங், நேற்று முன் தினம் மாலை தனது ஆதரவாளர்களுடன் ரூர்கியில் உள்ள உமேஷ் குமாரின் அலுவலகம் முன்பு வந்து அவரை வெளியே வரச்சொல்லி ஆவேசமாக பேசினார். ஆனால், உமேஷ் குமாரிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லை. ஒரு கட்டத்தில் கோபத்தில் உச்சத்தில் இருந்த பிரணவ் சிங், பல முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உமேஷ் குமார், தனது ஆதரவாளர்களுடன் பிரணவ் சிங்கின் அலுவலகத்துக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டு அதே போல் துப்பாக்கியால் சுட்டார். இருவரும் மாறி மாறி அலுவலகத்துக்குச் சென்று துப்பாக்கியால் சுடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரூம் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், பிரணவ் சிங்கை ராணிபூர் காவல் நிலையத்துக்கும், உமேஷ் குமாரை ரூர்கி காவல் நிலையத்துக்கும் போலீசார் அழைத்துச் சென்றனர். துப்பாக்கியைச் சண்டையைத் தொடர்ந்து அவர்கள் இருவரது துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்யவும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)