ADVERTISEMENT

பெண் பத்திரிகையாளர் மீது உபா! காஷ்மீரில் தொடரும் அத்துமீறல்!

06:10 PM Apr 21, 2020 | kalaimohan

இந்தியாவின் பல பகுதிகளில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காஷ்மீரிலோ பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது கொடிய உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கத் துடிக்கிறது காவல்துறை.

ADVERTISEMENT


மஸ்ரத் ஜேரா என்ற பெண் பத்திரிகையாளர், இந்தியா மட்டுமின்றி, உலகின் புகழ்பெற்ற பல்வேறு பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர். இவர்மீதுதான் உபா சட்டத்தின் 13வது பிரிவு மற்றும் 505-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேசவிரோத கருத்துகளை பதிவு செய்தார். இளைஞர்களை தெருவில் வந்து போராடுவதற்குத் தூண்டும் விதமாகப் பதிவிட்டார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரது பதிவுகள் இருக்கின்றன” என்று மஸ்ரத் ஜேரா மீது புகார்களை அடுக்குகிறது ஸ்ரீநகர் காவல்துறை. ஆனால் குறிப்பிட்டு, இந்த பதிவுதான் இவ்வளவு கொடுமையான ஒரு சட்டத்தைப் பதிவு செய்ததற்கான காரணம் என்று காவல்துறை தற்போது வரை தெளிவுப்படுத்தவில்லை.

ADVERTISEMENT



சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான, உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால், ஒருவரை எடுத்த மாத்திரத்தில் தீவிரவாதி என்று முத்திரை குத்தமுடியும். ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைத்து வைக்கமுடியும். தண்டனைக் காலமும் குறிப்பிட்ட வரம்புக்குள் வராது. இப்படியொரு கொடிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மஸ்ரத், “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் நண்பர்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் மூலமாக மட்டுமே இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிந்துகொண்டேன்.

ஜம்மு காஷ்மீரில் நடப்பவற்றை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் குரலை ஒடுக்கப் பார்க்கிறது அரசு. என்மீதான வழக்கில் ஒரு இடத்தில்கூட என்னைப் பத்திரிகையாளர் என்று குறிப்பிடவில்லை. வெறும் முகநூல் பயன்பாட்டாளர் என்றே காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மிக முக்கியமாக, நான் சமூக வலைதளங்களில் பதிவிட்ட அனைத்துமே இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் பதிவான செய்திகள் மட்டுமே. இதற்காக என்னைக் கைதுசெய்வது எந்தவிதத்தில் நியாயம்” என்று ஆவேசமாகக் கேள்வியெழுப்பி இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்புதான் புகழ்பெற்ற அறிஞர் ஆனந்த் தெல்டும்ப்டே மற்றும் பத்திரிகையாளர் கவுதம் நவலகா ஆகியோர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது, காஷ்மீரில் ஒரு பெண் பத்திரிகையாளரும் இதே கொடூர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT