Father thrash Daughter who ran away with boyfriend in Bihar

மாற்று சமூகத்தைச் சேர்ந்தகாதலனுடன் தப்பிச் சென்றதால் தனது மகளையே தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள சமஸ்திபூரைச் சேர்ந்தவர் சாக்‌ஷி (25). இவர் வேறு சாதியைச் சேர்ந்த பக்கத்து வீட்டு நபர் ஒருவருடன் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் தங்கள் ஊரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு தப்பித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதன் பின்னர், வீட்டுக்கு திரும்பும்படி சாக்‌ஷியின் தந்தை முகேஷ் சிங் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் சாக்‌ஷி மீண்டும் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சாக்‌ஷி காணாமல் போனார். இது குறித்து சாக்‌ஷியின் தாயார், முகேஷ் சிங்கிடம் கேட்டபோது மகள் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த தாய், போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது முகேஷ் சிங்கின் வீட்டில் பூட்டிய குளியலறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டனர். அதன்படி அந்த அறையை உடைத்து பார்த்த போது, சாக்‌ஷியின் உடல் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு, முகேஷ் சிங்கிடம் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில், தனது மகளை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து, முகேஷ் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.