ADVERTISEMENT

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்; “தவறு செய்திருந்தால் தூக்கிலிடுங்கள்” - கைதானவரின் தந்தை

07:07 PM Dec 13, 2023 | mathi23

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

ADVERTISEMENT

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு உள்ளே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என்பதும் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே(25) என்பதும் தெரியவந்தது. கைதான மனோரஞ்சனின் தந்தை கர்நாடகாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இது தவறு. இந்த தவறை யாரும் இனிமேல் செய்யக்கூடாது. எனது மகன் ஏதாவது நல்லது செய்திருந்தால் நிச்சயமாக நான் அவரை ஆதரிப்பேன். ஆனால், அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் இந்த சமூகத்திற்கு ஏதாவது தவறு செய்திருந்தால் அவரை தூக்கிலிடுங்கள்” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT