Skip to main content

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்; 4 பேர் மீது வழக்குப் பதிவு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Father Periyar's Birthday Celebration Filed case on behalf of Vishwa Hindu Parishad

 

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியைச் சென்ற வருடம் சமூகநீதி நாள் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து உறுதி மொழியும் ஏற்றது. அதன்படி இந்த வருடமும் பெரியாரின் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்படப் பலரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 

இந்நிலையில், உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் குறாரா பகுதியில் பெரியார் பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளனர். அந்த விழாவில் அமர் என்பவர், "கடவுளைப் படைத்தவன் முட்டாள், கடவுளைப் பிரச்சாரம் செய்பவன் 'தூசி' (பொல்லாதவன்). மேலும் கடவுளை வணங்குபவன் பெரிய முட்டாள். இதுதான் உண்மை" எனப் பேசியுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் (வலது சாரி அமைப்பு) செப்டம்பர் 19 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது. இந்நிலையில், விழாவில் கலந்து கொண்ட அமர் சிங்க், டாக்டர் சுரேஷ், அத்வேஷ், அசோக் வித்யார்த்தி ஆகியோர் மீது 295 (ஒரு வகுப்பினரின் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் பேசுவது), 153ஏ (மதம், இனம், பிறந்த இடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்)வின் கீழ் வழக்கு தொடுத்துள்ளனர்.

 

நால்வரும் பகுஜன் சமாஜ் கட்சியினர், பீம் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கைதான நால்வரில் ஒருவரின் சகோதரர், வழக்கறிஞர் ஹர்டௌல் சிங்க், "அவர்கள் எந்த இயக்கத்திலும் இல்லாத சமூக சேவை செய்து வரும் தலித்துகள். நால்வரும் பெரியாரின் கருத்துகளைக் கூறி விழிப்புணர்வு தான் ஏற்படுத்தினார்கள். பெரியாரும், சாதி வெறியையும் மக்களை பக்தர்களாக மாற்றும் அனைத்து மதச் சடங்குகள் மற்றும் சிலைகளை விமர்சித்துள்ளார். ஆனால், தற்போது எனது சகோதரர் மன அழுத்தத்திலும் பயத்திலும் இருக்கிறார்.” கூட்டத்தில் சுமார் 150 பேர் இருந்ததாகவும், அவர்கள் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும். பின்னர், குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள்  மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டதாகவும் ஹர்டெளல் கூறினார்.

 

விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த அமித் ரஜாவத் தனது புகார் மனுவில், "அவர்கள் இந்து கடவுள்களை அவமதித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள ஒருவர், குழந்தைகள் உட்பட மக்கள் முன்னிலையில் இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் அவமதிக்கும் வார்த்தைகளால் பேசியுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

பின்பு இது குறித்து ரஜாவத் கூறுகையில், "நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் இவர்கள் ஈடுபட்டார்களா என்பது இப்போது நிச்சயமற்றது. அவர்களில் யாரேனும் நிரபராதி என்றால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு பகுஜன் சமாஜ் கொடிகள் இருந்ததைக் காண முடிந்தது. எனவே, பிற மதத்தைப் பற்றித் தவறாகப் பேச, எந்த மதமும் அறிவுறுத்தவில்லை" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்