/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/105_61.jpg)
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. ஆனால், இது கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவில் மண்ணை அள்ளிப்போடும் முயற்சி என்று தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்த்து வருகிறது. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தனது மகளைத் தந்தை ஒருவர் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நெல்கரஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த தோண்டிராம் போஸ்லே என்பவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சாதனா போஸ்லே, 12ஆம் வகுப்பு படித்து வந்தார். மருத்துவராகும் கனவு சாதனாவிற்கு இருந்ததால் நீட் தேர்வுக்கும் படித்து வந்துள்ளார்.
அந்த வகையில் அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வை சாதனா எழுதியிருந்த நிலையில், குறைவான மதிப்பெண்ணே எடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது தந்தை தேண்டிராம் மகள் சாதனாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் மகள் சாதனாவை கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார். மேலும், சாதனாவின் தாய் வந்து நிறுத்தியபோது, இரவு வரை தொடர்ந்து அடித்து உதைத்துள்ளார்.
இதையடுத்து காலையில் மயங்கிக் கிடந்த சாதனாவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாதனா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவி தாயார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமையாசிரியர் தோண்டிராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் சொந்த மகள் என்று கூட பார்க்காமல் அடித்துக் கொன்ற தந்தையின் செயல் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)