ADVERTISEMENT

விவசாயிகள் நிபந்தனையால் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் புதிய சிக்கல்...

10:35 AM Dec 01, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விவசாயிகள் முன்வைத்துள்ள நிபந்தனை காரணமாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து ஆறாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், விவசாயிகள் புராரி பகுதியில் போராட்டம் நடத்த முன்வந்தால், முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்தார். ஆனால், அவரது யோசனையை நிராகரித்த விவசாயிகள், தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இந்நிலையில், அமித்ஷா, வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையின்படி, இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், இதில் வெறும் 32 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமே பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் செய்தியாளர்களிடம் பேசியபோது, "மொத்தம் 500க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் உள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது. பிற குழுக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை. அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார். விவசாயச் சங்கங்களின் இந்த நிபந்தனையால் பேச்சுவார்த்தையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT