Skip to main content

விவசாயிகள் போராட்டம்: சூடான விவாதம்... தோல்வியில் முடிந்த எட்டாவது கட்டப் பேச்சுவார்த்தை!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

farmer leader
                                வெல்வோம் அல்லது மரணிப்போம் 

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏழு கட்டப் பேச்சுவார்த்தைகளில், வேளாண் சட்ட மசோதா தொடர்பாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

 

இந்தநிலையில், விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை, இன்று நடைபெற்றது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையும், உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய விவசாயச் சங்கத்தினர், பேச்சுவார்த்தையின்போது சூடான விவாதம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா, "சூடான விவாதம் நடந்தது. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும்  விரும்பவில்லை என்று நாங்கள் கூறினோம். நாங்கள் எந்த நீதிமன்றத்திற்கும் செல்லமாட்டோம். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் அல்லது நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ஜனவரி 26 ஆம் தேதி எங்கள் அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள், 'நாங்கள் வெல்வோம் இல்லையென்றால் இறப்போம்' என எழுதப்பட்ட வாசகங்களோடு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்