தன்னைக் கடித்த பாம்பை பழிவாங்கும் விதமாக பதிலுக்குக் கடித்துக் கொன்ற விவசாயி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த விவசாயி சோனேலால். இவர் தன் தோட்டத்திற்கு வேலை செய்வதற்காக சென்றபோது, அங்கிருந்த பாம்பு இவரைக் கடித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சோனேவால் தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்து, அதன் தலையைக் கடித்துத் துப்பினார். சில நிமிடங்களில் அதே இடத்தில் மயங்கி விழுந்த சோனேவாலை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மயக்கம் கலைந்து எழுந்த சோனேவால் என்ன நடந்தது என்பதை விளக்கச் சொல்லியிருக்கிறார்.
பின்னர் நடந்தவற்றை நினைவுப்படுத்திக் கொண்ட அவர், ‘என்னை அந்த பாம்பு கடித்தது. அதனால், பதிலுக்கு அந்த பாம்பின் தலைப்பகுதியை நான் கடித்து, மென்று துப்பினேன். பின்னர் கிராமத்திற்கு எடுத்துவந்து மீதமிருந்த தலையையும் நான் கடித்துத் துப்பினேன்’ என தெரிவித்துள்ளார்.
சோனேவாலின் உடலில் எந்த இடத்திலும் பாம்பு கடித்ததற்கான தடயங்கள் இல்லை எனக்கூறியுள்ள மருத்துவர் சஞ்சய்குமார், ‘அவர் பாம்பின் தலைப்பகுதியை கடித்தது மட்டுமின்றி, மென்று துப்பியிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. என் வாழ்நாளில் இப்படி ஒன்று நடந்து நான் பார்த்ததேயில்லை’ என ஆச்சர்யமான முகத்துடன் தெரிவித்துள்ளார்.