Skip to main content

தினமும் 40 கிலோமீட்டர் ஓடும் புனித் ராஜ்குமார் ரசிகை!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

puneeth's fan

 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார், சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மறைந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள மனகுண்டி கிராமத்தைச் சேர்ந்த புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகையான திராக்ஷாயணி பாட்டீல் என்பவர், கண் தானம் மற்றும் இரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தினமும் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

 

15 நாட்களில் 500 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கத் திட்டமிட்டு, அதாவது தினமும் 40 கிலோமீட்டர் தூரம் ஓட முடிவுசெய்து, இரண்டு வார காலத்திற்கு முன்பு தனது தொடர் ஓட்டத்தைத் தொடங்கிய திராக்ஷாயணி பாட்டீல், இன்று (14.12.2021) புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து, திருமணத்திற்குப் பிறகு ஓடுவதை நிறுத்திய திராக்ஷாயணி பாட்டீல், தற்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தனது இந்த தொடர் ஓட்டம் குறித்து பேசியுள்ள திராக்ஷாயணி பாட்டீல், "புனித் ராஜ்குமார் படப்பிடிப்பிற்காக தார்வாட்டில் இருந்தபோது அவரைச் சந்திக்க பலமுறை முயற்சித்தேன். ஆனால் பலனில்லை. கண் தானத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம், கண் தானம் தொடர்பான விழிப்புணர்வுக்கு எனது பங்களிப்பைச் செய்கிறேன்.” என்றார்.

 

தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் திராக்ஷாயணி பாட்டீலை அவரது கணவரும், மூன்று பிள்ளைகளும் வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Chennai Police important instruction regarding traffic changes

சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ மற்றும் 10 கி.மீ) ‘சென்னை மாரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நாளை (06.01.2024) காலை 04.00 மணி முதல் நடைபெறுகிறது. இந்த மாரத்தான் ஓட்டம் சென்னை நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே. சாலை, இ.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘அடையார் மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

போர் நினைவிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு - வாலாஜா பாயின்ட் அண்ணா சாலை வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். ஆர்.கே. சாலையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே. மடம் சாலை வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

மத்திய கைலாஷிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. (LB) சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். காந்தி மண்டபத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்.ஜி. சாலையை நோக்கி திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல் (ML) பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘கட்டணமின்றி பயணம் செய்யலாம்’ -  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
You can travel without toll Chennai Metro Rail Corporation announcement

சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ மற்றும் 10 கி.மீ) ‘சென்னை மாரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நாளை (06.01.2024) காலை 04.00 மணி முதல் நடைபெறுகிறது. இந்த மாரத்தான் ஓட்டம் சென்னை நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே. சாலை, இ.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (06.01.2024) அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும் எனச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகள், நாளை (06.01.2024) அதிகாலை 03.00 மணி முதல் 05.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சிறப்பு கியூஆர் (QR) குறியீடு பதியப்பட்ட பயண அட்டையைப் பயன்படுத்தி நாளை (06.01.2024) ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம். இந்த கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம். வழக்கமான மெட்ரோ இரயில் சேவைகள் காலை 05.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.