Skip to main content

குழந்தை இல்லாததால் குடும்பமே சேர்ந்து மருமகளைக் கொலை செய்த கொடூரம்!

Published on 28/05/2025 | Edited on 28/05/2025

 

The family massacre their daughter-in-law because they had no children in karnataka

குழந்தைகளை பெற்றெடுக்காததற்காக பெண் மருத்துவர் ஒருவரை, அவரது மாமனார் மாமியார் கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் ஹோனகண்டே, மகாராஷ்டிராவில் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், ரேணுகா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு பெரியோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ரேணுகா, விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். நன்கு படித்தவர்களாகவும், பொருளாதார ரீதியாக நிலையானவர்களாகவும் இருந்த போதிலும், இவர்களது திருமண வாழ்க்கையில் சிக்கலாகவே இருந்துள்ளது. 

ரேணுகாவின் உடல்நிலை மோசமாக இருந்ததாலும், அவர் கருத்தரிக்க முடியாமல் இருந்ததாலும் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வரதட்சணை மற்றும் குழந்தை இல்லாதது தொடர்பாக ரேணுகாவை, சந்தோஷின் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ரேணுகா தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், சந்தோஷ் வேறு பெண்ணை மறுமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அவரது இரண்டாவது மனைவி கர்ப்பமாகியுள்ளார். 

இந்த நிலையில், ரேணுகாவை கொலை செய்ய சந்தோஷ் திட்டமிட்டுள்ளார். அதனை தனது தாய் தந்தையிடம் சொல்லியுள்ளார். அதன்படி, கடந்த மே 18ஆம் தேதி சந்தோஷின் தாயார் ஜெயஸ்ரீ, ரேணுகாவை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ள்ளார். அன்று இரவு திரும்பி வரும் வழியில் ஜெயஸ்ரீ, ரேணுகாவை ஓடும் இருசக்கர வாகனத்தில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து சந்தோஷின் தந்தை கமன்னா, ரேணுகாவை கல்லால் தாக்கி பின்னர், அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதனையடுத்து இருவரும், ரேணுகாவின் உடலை பைக்கில் கட்டி 100 மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்று, அவரது சேலை பைக் சக்கரத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்து போல் காட்டியுள்ளனர். 

அதனை தொடர்ந்து கமன்னா, காவல்துறைக்கு போன் செய்து தனது மருமகள் ரேணுகா விபத்தில் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அப்போது, ரேணுகாவுக்கு மட்டுமே காயம் இருந்ததையும், அவர்கள் இருவரும் காயமடையவில்லை என்பதை போலீசார் உணர்ந்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், கமன்னா மற்றும் ஜெயஸ்ரீயிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஜெயஸ்ரீயும் கமன்னாவும் தாங்கள் செய்த கொலையை ஒப்புக்கொண்டனர். அவர்களது மகன் சந்தோஷும், இந்த கொலையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர்கள் மூவர் மீது கொலை மற்றும் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்