Skip to main content

இந்திய ராணுவத்தில் இருந்து சீக்கியர்களை நீக்க ஆலோசனையா? - வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

CCS

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை  ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

இந்தசூழலில் இந்திய ராணுவத்தில் சீக்கியர்களை நீக்குவது தொடர்பாக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வீடியோ ஒன்று வேகமாக பரவ தொடங்கியது. இந்தநிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றிருந்த அந்த வீடியோ போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

ராணுவத்தில் இருந்து சீக்கியர்களை நீக்குவது போன்ற எந்த ஆலோசனையோ அல்லது கூட்டமோ நடைபெறவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே முப்படை தளபதி பிபின் ராவத் மறைவையொட்டி நடைபெற்ற  பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டத்தின் வீடியோவில், கிளப் ஹவுஸ் என்ற சமூகவலைதளத்தில் சிலர் பேசிய ஆடியோவை இணைத்து இந்த போலி வீடியோ பரப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

“டர்பன் அணிந்திருந்தால் காலிஸ்தானியா?” - பா.ஜ.கவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Mamata Banerjee strongly condemns BJP who crictized a police wear a turban

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடந்துவருவதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

இதனிடையே, மேற்கு வங்க சட்டப்பேரவையில், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்ட 6 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து, மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் உட்பட பா.ஜ.க.வினர், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு தொடர்ந்து  பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீக்கிய போலீஸ் அதிகாரியை, பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் காலிஸ்தானி தீவிரவாதி எனக் கூறியதாக பேசும் வீடியோவை வெளியிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவில், பா.ஜ.க எம்.எல்.ஏ அக்னிமித்ர பால், டர்பன் அணிந்திருந்த சீக்கிய போலீஸ் அதிகாரியை நோக்கி, ‘காலிஸ்தானி தீவிரவாதி’ எனக் கத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சீக்கிய போலீஸ் அதிகாரி, “நான் டர்பன் அணிந்திருப்பதால் இப்படி சொல்கிறீர்கள். உங்களுக்கு காவல்துறையிடம் ஏதாவது பிரச்சனை இருந்தால் காவல்துறையைப் பற்றிக் கூறுங்கள். உங்கள் மதத்தைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. அப்படியிருக்க நீங்கள் எப்படி அவ்வாறு கூறலாம்” என்று கூறியதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, இந்த வீடியோவை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பாஜகவின் பிரித்தாளும் அரசியல், இன்று அரசியல் சட்ட வரம்புகளை வெட்கமின்றி மீறியுள்ளது. பா.ஜ.கவை பொறுத்தவரை, தலைப்பாகை அணிந்த ஒவ்வொருவரும் ஒரு காலிஸ்தானி. நமது தேசத்திற்கான தியாகங்கள் மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்காக போற்றப்படும் நமது சீக்கிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் நற்பெயருக்கு குழிபறிக்கும் இந்த துணிச்சலான முயற்சியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வங்காளத்தின் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.