Fake Officer who raided MLA's house in puducherry

புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர் உழவர்கரை தொகுதியில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் பா.ஜ.க கட்சியின் ஆதரவு பெற்ற எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று முன் தினம் (22-10-23) இவருடைய செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில், எதிர்முனையில் இருந்து சிவசங்கரனிடம், ‘தான் ஓரு அமலாக்கத்துறை அதிகாரி என்றும், நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், உங்கள் வீட்டில்சோதனை செய்து இது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு சிவசங்கரன், தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

Advertisment

அதனையடுத்து, சில மணி நேரம் கழித்து சிவசங்கரன் வீட்டிற்கு கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார். மேலும், அந்த நபர் சிவசங்கரனிடம், செல்போனில் பேசியது நான் தான் எனக்கூறி அடையாள அட்டையை கேட்டுள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிவசங்கரன், அவரது அலுவலக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து அலுவலக ஊழியர்கள் சிவசங்கரன் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர். இதையடுத்து, அந்த நபரை பிடித்து அந்த ஊழியர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ஒரு போலி அமலாக்கத்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. உடனடியாக, அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Advertisment

இதையடுத்து, காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் சென்னையைச் சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (35) என்பது தெரியவந்தது. மேலும், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர் உருளையன்பேட்டை பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த இவர், கூகுள் வாயிலாக புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களின் தொடர்பு எண் மற்றும் வீட்டின் முகவரியை சேகரித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ நேரு மற்றும் சிவசங்கரன் ஆகியோர்களை தொடர்பு கொண்டு அளவுக்கு அதிகமான சொத்து சேகரித்துள்ளதாக புகார் வந்துள்ளது என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இந்த நிலையில்தான் சிவசங்கரன் வீட்டிற்கு சென்றபோதுபிடிபட்டுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.