Explanation of State Election Commissioner about Incident at a voter in MP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 93 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மராட்டியத்தில் 11 தொகுதிகளிலும் கோவாவின் 2 தொகுதிகளிலும் இன்று (07-05-24) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

மேலும் அஸ்ஸாம் - 3, பீகார் - 5, சத்தீஸ்கர் - 7, மத்தியப் பிரதேசம் - 8, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரின் மரணத்தைத் தொடர்ந்து 2 ஆம் கட்டத்திலிருந்து 3 ஆம் கட்டத்துக்கு மாற்றப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதிக்கான தேர்தலும் நடைபெற்றது. உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்தத்தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேசம் மாநிலம், பிந்த பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்வர்தன் (25). இவர் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக பி.டி.ஐ சாலையில் உள்ள வாக்குச்சாவடியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைகொண்டு ராஜ்வர்தனை சுட்டனர். இதில் படுகாயமடைந்த ராஜ்வர்தன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள், படுகாயமடைந்த ராஜ்வர்தனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் அனுபன் ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று கவனத்திற்கு வந்துள்ளது. உள் மோதல் காரணமாக இது நடந்துள்ளது. வாக்குச் சாவடியிலிருந்தும் 400 மீட்டர் தொலைவில் இது நடந்தது. அதனால், தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை” என்று கூறினார்.