ADVERTISEMENT

‘சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு’ - உச்சநீதிமன்றம் உத்தரவு

03:10 PM Jan 12, 2024 | prabukumar@nak…

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கில் டிசம்பர் 21இல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி டிசம்பர் 21 ஆம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை பொன்முடி இழந்திருந்தார். அதே சமயம் சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவில், “இந்த வழக்கை பொறுத்தவரையில் சென்னை உயர்நீதிமன்றம் சரியாக விசாரணை செய்யவில்லை. ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சதிஷ் சந்தர வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி உள்ளிட்டோர் ஆஜரானார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT