Advertisment

“என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளார்” - முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Ex-minister Chandra Priyanka accuses husband

Advertisment

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சராக இருந்தவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில்.. என். ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பின்னர் இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில்.. போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் சந்திர பிரியங்காவின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி அவரை பதவி நீக்கம் செய்வதாக இருந்த நிலையில், சந்திர பிரியங்காவே தனது பதவியை ராஜினாமா செய்தார். தான் சாதி மற்றும் பாலின ரீதியில் தாக்கப்படுவதாக கூறி புதுச்சேரி அரசிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதுச்சேரியில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சந்திர பிரியங்காவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவரது அலுவலகத்திற்கும் இரண்டு முறை சீல் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இத்தகைய சூழலில், முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கும் அவரது கணவர் சண்முகத்துக்கும்இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இவர்கள் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கும் குடும்ப பிரச்சனை தான் காரணம் என சொல்லப்படுகிறது. அதே வேளையில், சந்திர பிரியங்காவின் பதவி பறிக்கப்பட்ட நேரத்தில், கணவர் சண்முகம் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு.. சந்திர பிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கணவர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் அளித்துள்ளார்.தற்போது, இதன் நீட்சியாக சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த 6 ஆம் தேதியன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அன்றைய தினம் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இருந்ததால் சந்திர பிரியங்காவே நேரில் வந்து குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனு தாக்கல் செய்தார். அப்போது, அந்த மனுவில், “நான் வகித்துவந்த அமைச்சர் பதவியை வைத்து,கணவர் சண்முகம் பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். அதனை தட்டி கேட்டதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி தன் அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ளாமல் தன்னை கட்டுப்படுத்த முயற்சித்தார்.

மேலும், சண்முகம் ஒரு குடிகாரன்,பெண் வெறியன் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏராளமான சித்திரவதைகளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, சொந்த மனைவியை பற்றி அவதூறு பரப்பும் ஒரு ஆணுடன் இனிமேல் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்துள்ளேன்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சரான சந்திரபிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டிருந்த மோதல் சம்பவம், தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டு வரை வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- சிவாஜி

police husband Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe