ADVERTISEMENT

"அத்தியாவசிய பொருள்கள் வீடு தேடி வரும்"- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு! 

03:55 PM Mar 27, 2020 | santhoshb@nakk…

புதுச்சேரி மாநிலத்தில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் ஒரு சிலரையும் போலீசார் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் நேற்று (26/03/2020) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரி யூனியன் பிரதேசம் பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடையது. அந்நாட்டு மக்கள் அதிகளவில் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். காரைக்காலில் வெளிநாட்டவர்களும், காரைக்காலை சேர்ந்தோரும் பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வருபவர்கள். எனவே காரைக்காலில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்போது மக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். காரைக்காலில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 334 பேர் வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இவர்களில் 4 பேருக்கு கரோனா குறித்த சந்தேகத்தின்பேரில் மருத்துவ பரிசோதனை செய்தபோது, கரோனா இல்லை என அறிக்கை வந்துள்ளது. எனினும் 185 பேர் அவரவர் வீடுகளில் தனியாக தங்கவைத்து, மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் கூட கரோனா வைரஸ் பரவியோர் எண்ணிக்கை கூடுகிறது. இறப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. விழிப்புணர்வு அதிகம். உலக அரங்கில் கரோனா தாக்கம் அதிகரித்தாலும், புதுச்சேரி மக்கள் விழிப்போடு கரோனாவை எதிர்க்கிறார்கள். எனினும் ஊடரங்கில் நகரப் பகுதி மக்கள் ஒத்துழைக்கிறார்கள். கிராமப்புற மக்கள் மேலும் விழிப்புணர்வு பெற வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

புதுச்சேரியில் அனைத்து அமைச்சர்களும் ஒருங்கிணைந்து கரோனா எதிர்ப்பு குறித்து முடிவுகள் எடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஏப்ரல் 14- ஆம் தேதி வரை மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

பொருள் தட்டுப்பாடு இல்லை. மேலும் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் போன் செய்தால், வீடு தேடி வந்து தரக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த சில நாள்களில் அமலுக்கு வரும். தேவையின்றி வாகனங்களில் ஊர் சுற்றுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும். வியாபாரிகள் மளிகை, காய்கனி, இறைச்சி போன்றவற்றை விற்கும்போது, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விலையை உயர்த்தி விற்கக்கூடாது. இது தேசத்தின் மக்கள் பிரச்சனை என்பதை வியாபாரிகள் உணர்ந்து செயல்படவேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் வாங்க செல்லும் மக்களை போலீசார் கண்டிப்புடன் நடத்தாமல், தேவையை அறிந்துகொண்டு அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிதிக்காக 17.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்துறைக்கு 7.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸை எதிர்கொள்ள இடைக்கால நிவாரணமாக புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு 200 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்றும் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT