ADVERTISEMENT

விடிய விடிய சோதனை; உன்னிப்பாகக் கவனிக்கும் இங்கிலாந்து அரசு!

07:54 AM Feb 15, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும் அதில் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசு திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும் இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. 'இந்தியா: மோடிக்கான கேள்வி' (India: The Modi Question) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்தது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தான் வருமான வரித்துறையினர் பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை 2வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. ஊழியர்களின் செல்போன் மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படத்தை வெளியிட்டதன் காரணமாகத்தான் இந்த சோதனை நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது சோதனை அல்ல கணக்கு ஆய்வு என்று தெரிவித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் இது மறைக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத சொத்து மதிப்புக்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பிபிசியின் வங்கிக் கணக்குகளைச் சரி பார்த்து வருவதாகக் கூறியுள்ளனர். இந்த நிலையில் பிபிசி அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT