
புதுச்சேரி மாநிலம் ஈசன்காடு பகுதியில் சிவானந்தம் என்ற இளைஞர் நான்கு பேர் கொண்ட இளைஞர் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
புதுச்சேரி மாநிலம் ஈசன்காடு பகுதியில் வசித்து வந்த சிவானந்தம் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் மதலப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், மகேந்திரன், ரஞ்சித், கார்த்திக் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி சிவானந்தத்தை படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

கொலை நடந்த பகுதிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில், கொலையில் சம்பந்தப்பட்ட ரஞ்சித், மகேந்திரன், ஆகாஷ், கார்த்திக் ஆகிய நான்கு இளைஞர்களும் சரணடைந்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு விநாயகர் சதுர்த்தியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.