YEDIYURAPPA

கர்நாடக மாநில பாஜகவில் நீண்ட நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக கட்சியில் உள்ளவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடியூரப்பாவின் பதவி பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங், எடியூரப்பாவின் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

Advertisment

இருப்பினும் இருப்பினும் அதிருப்தி ஓயவில்லை. இந்தநிலையில் எடியூரப்பா, தனத மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். மாநில விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது.

Advertisment

ஆயினும் அடுத்த நாள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசிய எடியூரப்பா, தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். மாநிலத்தில் தலைமையை மாற்றுவது குறித்து எந்த விவாதமும் எழவில்லை எனவும் தெரிவித்தார்.

இருப்பினும் பிரதமருடனான சந்திப்பில், எடியூரப்பா தனது உடல்நிலையை கரணம் காட்டி பதவி விலக முன்வந்ததாகவும், அதற்கு பதிலாக தனது மகனுக்கு மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்கவேண்டும் என கேட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் எடியூரப்பாவின் ராஜினாமவை ஏற்பது குறித்து பாஜக மேலிடம் விரைவில் முடிவெடுக்கும் எனவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் நலின் குமார் கட்டீல் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் பேசும் நபர், "மூன்று பேர் முதல்வர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யார் வேண்டுமானாலும் முதல்வராக வாய்ப்புள்ளது. இங்கிருக்கும் யாரும் முதல்வராக மாட்டார்கள். மத்திய தலைமை, டெல்லியிலிருந்து ஒருவரை முதல்வராக நியமிக்கும்" என தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ கர்நாடகா அரசியலில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் நலின் குமார் கட்டீல், அந்த ஆடியோ போலியானது என தெரிவித்துள்ளதோடு, இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என எடியூரப்பாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.