/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_263.jpg)
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி தாலுகாவில் அமைந்துள்ளது துடுகி கிராமம. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பிரதிமா. 37 வயதான இவர், கர்நாடக அரசின் கனிமவளம் மற்றும் நில அறிவியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பிரதிமாவுக்கும் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்களது குடும்பத்தில் காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதிமா கடந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை விட்டு பிரிந்து தலைநகர் பெங்களூரில் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையில், பிரதிமாவின் சகோதரரான பிரதீஷ் என்பவர் பெங்களூர் மாநகராட்சியில் காண்ட்ராக்டராக இருந்து வருகிறார். இதனால் பெங்களூரில் இருக்கும் தனது சகோதரி பிரதிமாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதே வேளையில், கர்நாடக அரசு பணியில் இருக்கும் பிரதிமா மிகவும் நேர்மையானவர். பெங்களூருவில் லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துவந்தார். மேலும், தமிழ்நாட்டுக்கு ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்வதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதியன்று பிரதிமா தனது அலுவலகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து, பிரதிமாவின் அண்ணன் பிரதீஷ் வழக்கம்போல் தந்து தங்கையை செல்போனில் அழைத்து பேச முயன்றார். ஆனால், அவர் மூன்று முறை செல்போனில் அழைப்பு விடுத்தும் பிரதிமா எடுத்து பேசவில்லை. இதனால் காலையில் பேசி கொள்ளலாம் என பிரதீஷும் விட்டுவிட்டார். இதற்கிடையில், அடுத்த நாள் காலையும் பிரதிமா செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. ஒருகட்டத்தில், இதனால் சந்தேகமடைந்த பிரதீஷ்.. உடனடியாக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அங்குள்ள ஒரு அறைக்குள் பிரதிமா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதீஷ்.. தனது சகோதரியின் உடலை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த பெங்களூரு போலீசார், கை ரேகை நிபுணர்களுடன் வந்து பிரதிபா கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்கள் சேகரித்தனர்.அதன்பிறகு, பிரதிபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்.. மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
அதே வேளையில், பிரதிபாவின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதும், அவரை ஒன்று அல்லது இரண்டு பேர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர். அந்த நேரத்தில், போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி.. பிரதிபா அரசு வாகனத்தில் புதிய டிரைவர்தான் வந்து இறக்கிவிட்டுள்ளார்.இதனால் சந்தேகமடைந்த போலீசார்.. முன்னாள் டிரைவர் கிரண் என்பவரிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் பெங்களூரிலிருந்து 200 கிலோமீட்டர்தொலைவில் உள்ள சாமராஜநகருக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்.. டிரைவர் கிரணை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது, போலீஸ் விசாரணையில் அவர் சொன்ன தகவல்கள் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. கிரண் என்பவர் கொலை செய்யப்பட்ட பிரதிபாவின் முன்னாள் கார் டிரைவர். ஆரம்பத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட முரணால்.. கிரணை வேலையை விட்டு தூக்கிவிட்டு புதிய டிரைவரை பணியமர்த்தியுள்ளார். இதனால் கோபத்தில் இருந்த கிரண்.. சம்பவ நாள் அன்று பிரதிபா வீட்டுக்கு வந்து முறையிட்டுள்ளார். அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கிரண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரதிபாவை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, கிரணிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்கு பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில், கிரணின் வாக்குமூலத்தில் சில முரண்கள் இருப்பதாக போலீசார் உணருகின்றனர். அரசு அதிகாரி பிரதிபாவை கொலை செய்தது டிரைவர் கிரண் தானா? அல்லது ஏதேனும் கடத்தல் கும்பலா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில், பெண் அரசு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு.. அம்மாநில முதல்வர் சித்தராமையா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளார். தற்போது, பெங்களூரில் பெண் அரசு அதிகாரி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிவாஜி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)