ADVERTISEMENT

மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

05:53 PM Jan 29, 2024 | mathi23

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதில் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி ஆதரவைத் திரட்டி வருகின்றனர். இதற்கிடையே, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு எனப் பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில், 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்காகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மேலும், 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

அதனால், ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி மற்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT