ADVERTISEMENT

மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு; தேர்தல் ஆணையம் அதிரடி!

08:38 PM Mar 20, 2024 | prabukumar@nak…

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

அதே சமயம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது. சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மத்திய இணை அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களைத் தொடர்புப்படுத்திப் பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா மீது தி.மு.க. அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க, கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் இந்த பேச்சுக்கு மதுரையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT