Election Commission Notification New name for Sharad pawar party

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

Advertisment

இதையடுத்து, பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் உட்பட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையில் 2 அணிகளாக செயல்படத்தொடங்கியது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, தங்களுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார் மற்றும் அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இரு தரப்பு மனுக்களையும் விசாரித்து வந்த தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் (06-02-24) அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் சரத்பவார் அணிக்கு புதிய கட்சி பெயரை தேர்வு செய்ய 3 விருப்பங்களை தாக்கல் செய்யுமாறு நேற்று (07-02-24) பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கி இருந்தது. அதன்படி, சரத்பவார் தலைமையிலான அணி சார்பில், ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’, ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்ராவ் பவார்’ மற்றும் ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார்’ ஆகிய 3 பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அவர்கள் வழங்கிய முதல் பெயரான ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’ என்ற பெயரை ஏற்றுஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 27ஆம் தேதி 6 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில், ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’ என்ற பெயருடன் சரத்பவார் அணி போட்டியிட இருக்கிறது. விரைவில் அவரது புதிய கட்சிக்கு சின்னமும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.