12,915 பேரின் வாக்குகள் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்...

நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட 12,915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

election commission clarifies chennai high court about postal voting issue

தேர்தல் பணியில் இருந்த பலருடைய தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேவையான 12, 12ஏ விண்ணப்ப படிவங்கள் முறையாக வழங்கப்படவில்லை. எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்களை மீண்டும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்த இந்திய தேர்தல் ஆணையம், முறையாக படிவங்கள் நிரப்பாமல் இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது.

இதையடுத்து, தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், வருங்காலத்தில் தபால் ஓட்டுக்கள் பதிவில் இது போன்ற குழப்பங்கள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ளவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe