Eknath Shinde withdraws from the Cm race

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், மகாயுதி கூட்டணியில் உள்ள பா.ஜ.க 132 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதே போல், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதே சூழ்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வியும் எழுந்திருந்தது. கூட்டணி கட்சிகளுக்குள் ஆலோசனை நடத்தி அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்போம் என்று மகாயுதி கூட்டணி தலைவர்கள் கூறி வந்தனர்.

இதில், முதல்வராக பதவி வகித்து வந்த ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 132 இடங்களை வைத்திருக்கும் பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டே ஆதரவு இல்லாமல் அஜித் பவாரின் ஆதரவை மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற முனைப்பில் இருந்தது. இந்த சூழ்நிலையில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும், முதல்வர் போட்டியில் தான் இல்லை எனவும் அஜித் பவார் கூறினார். இருந்த போதிலும், அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து, மகாயுதி கூட்டணி தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இணைந்து நேற்று (26-11-24) அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். மேலும், முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் வழங்கினார். இதன் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

Eknath Shinde withdraws from the Cm race

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே இன்று (27-11-24) செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது அவர், “நான் எப்போதும் ஒரு தொழிலாளியாகவே வேலை செய்திருக்கிறேன். நான் என்னை ஒரு முதலமைச்சராக கருதவில்லை. முதல்வர் (CM) என்றால் பொதுவான மனிதன் (Common Man), இதை கருத்தில் கொண்டு தான் நான் உழைத்தேன். மக்களுக்காக பாடுபட வேண்டும். குடிமக்கள் எப்படி தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏதேனும் என்னால் சிக்கல் இருக்கும் என உங்கள் மனதில் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும், நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும், அந்த முடிவு எனக்கு ஏற்கத்தக்கது என்றும் பிரதமரிடம் கூறியுள்ளேன். நீங்கள் எங்கள் குடும்பத்தின் தலைவர். உங்கள் முடிவை பா.ஜ.க.வினர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்களோ, அப்படியே உங்கள் முடிவை நாங்களும் ஏற்றுக்கொள்வோம். நான் நேற்று பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்னால் ஆட்சி அமைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினேன்.

மகாயுதி கூட்டணியில் யார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சிவசேனா கட்சியினர் அவருக்கு ஆதரவளிப்பார்கள். மகாயுதி கூட்டணியை ஆதரித்து எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்ததற்காக மகாராஷ்டிராவின் அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. இது முன்னெப்போதும் இல்லாதது. பாலாசாகேப் தாக்கரேவின் பொது சிவசேனா கட்சியினர் முதல்வராக வேண்டும் என்ற கனவை அமித் ஷாவும், பிரதமர் மோடியும் நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் எப்போதும் என்னுடன் நின்றிருக்கிறார்கள்.

Advertisment

Eknath Shinde withdraws from the Cm race

கடந்த 2, 3 நாட்களாக யாரோ ஒருவர் கோபமாக இருப்பதாக வதந்திகளை பரப்புகின்றனர். நாங்கள் கோபப்படுபவர்கள் அல்ல. நான் நேற்று பிரதமருடன் பேசி, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் எங்கள் முடிவில் எந்தத் தடையும் இல்லை என்று கூறினேன். பாஜகவின் முடிவே இறுதியானது. முதல்வர் பதவி தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அவர்களின் வேட்பாளருக்கு சிவசேனா முழு ஆதரவு அளிக்கும். நாளை (28-11-24) அமித் ஷாவுடன் மகாயுதி கூட்டணிகளான மூன்று கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் விரிவான விவாதங்கள் நடைபெறும். அதன் பின், முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.