Advertisment

தரப்பட்ட இரண்டு நிமிடம்; தரவுகளுடன் வலியுறுத்தல் - மக்களவையில் துரை வைகோ எம்.பி!

 Durai Vaiko's Maiden Speech in the Lok Sabha

Advertisment

இந்திய நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதன்முறையாக நாடாளுமன்றம் கூடியது. ஜூன் 25 ஆம் தேதி மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் துரை வைகோ பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (02.07.2024) பங்கேற்று துரை வைகோ தன்னுடைய கன்னிப்பேச்சினை பதிவு செய்தார்.

துரை வைகோ பேசியதாவது 'ஜனநாயகக் கோவிலான இந்திய நாடாளுமன்றத்தில் எனது கன்னி உரையை நிகழ்த்த வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன்'. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இந்த நாட்டில் பற்றி எரியும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஐந்து முக்கியமான பிரச்சனைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன்.

முதலாவதாக, இந்தியாவின் பொறியியல் ஆற்றல் மையமான திருச்சிக்குப் புத்துயிர் அளிப்பது தொடர்பாகப் பேச விரும்புகிறேன். பெல் தொழிற்சாலை, OFT, கோல்டன் ராக் ரயில்வே பணிமனை மற்றும் HAPP ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும், இதை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தி திருச்சி நகரத்தின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் கோரிக்கை வைக்கிறேன்.

Advertisment

இரண்டாவதாக, இலங்கை கடற்படையின் ஆக்கிரமிப்புகளையும் வன்முறைகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் தமிழக மீனவர்களின் அவல நிலையைக் கூற விரும்புகிறேன். இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை 3020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நமது மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்சத்தீவை மீட்கவும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்றாவதாக, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய தென்னக நதிகளை இணைப்பது முழு தீபகற்பப் பகுதிக்கும் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறி, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 7000 கோடி இதற்கு தேவைப்படும் நிலையில் தமிழக அரசு தனது சிறிய ஆதாரங்களுடன் இப்பணியை ஏற்கெனவே முன்னெடுத்துள்ளது. எவ்வாறாயினும் தீபகற்ப நதிகளை இணைக்கும் முழுத் திட்டத்தைத்தொடங்கவும், நிதி அளிக்கவும் ஒன்றிய அரசு முன் வரும் என நம்புகிறேன். இதனால் ஐந்து மாநிலங்களின் வறட்சி பாதித்த பகுதிகள் குறிப்பாக, எனது தொகுதிக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகள் பயனடையும். தென்னக நதிகள் இணைப்பால் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைவார்கள். ஆகவே, தேவையான முன் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையான வெய்யிலிலும், மழையிலும், பட்டினியிலும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும் அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. விவசாயிகள் தாக்கப்பட்டனர். அவர்கள்மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை பெற்றுத்தரவும், விவசாயிகளுக்கு நிலையான சூழலை உருவாக்கவும் ஒன்றிய அரசு தவறிவிட்டது. அவர்களின் போராட்டங்களை ஒன்றிய அரசு புரிந்துகொள்ளவில்லை. ஆகவே, விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மற்றும் இதர தேர்வுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை நீக்குவதற்கு உண்டான வழிமுறைகள் எதுவும் குடியரசு தலைவர் உரையில் இடம்பெறாததற்கு வருந்துகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா 2022 -க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.நீட் தேர்வின் பாதிப்புகளைக் குறிப்பிட்டு, ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நான் மதிமுக சார்பிலோ, இந்தியா கூட்டணி சார்பிலோ, எந்த ஒரு சித்தாந்தத்தின் சார்பிலோ பேசவில்லை. ஆனால் நான், சாமானியர்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும், மாணவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவும் பேசுகிறேன். அரசியல் எல்லைகள், சித்தாந்தங்களைத்தாண்டி சாதாரண மக்களுக்குச் சேவை செய்வோம். அவர்களை அரவணைப்போம் என இந்த அவையின் முன்பு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க சமூக நீதி, வாழ்க சமத்துவம், வாழ்க மதச்சார்பின்மை, வாழ்க சகோதரத்துவம், வாழ்க உலகளாவிய சகோதரத்துவம். உரையாற்றுவதற்கு ஐந்து நிமிடங்கள் வாய்ப்பு தரப்படும் எனத்தெரிவித்து இருந்த நிலையில், இரண்டு நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. நான் உரையாற்றும்போது, தரவுகளைத்தவிர்த்து கையில் எந்த குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் உரையாற்ற வேண்டும் என நினைத்து இருந்தேன். ஆனால், இரண்டு நிமிடங்கள் மட்டுமே தரப்பட்டதால் தயாரித்து வைத்திருந்த உரையின் பல பகுதிகளை விட வேண்டியதாயிற்று. முழுமையாகப் பேச முடியவில்லை. உரையை நிறைவு செய்வதற்கு உள்ளாகவே பேச்சை நிறுத்தும்படி ஆயிற்று என்றார்.

mdmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe