Skip to main content

குடியரசுத் தலைவராக நாளை பதவியேற்கும் திரௌபதி முர்மு - ஏற்பாடுகள் தீவிரம்

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

draupadi murmu

 

புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு நாளை காலை 10.15 மணிக்கு பதவி ஏற்கவுள்ளார்.

 

குடியரசுத் தலைவராக பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், நாளை பதவியேற்க இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

 

முன்னதாக, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்போடு நாடாளுமன்றம் அழைத்துவரப்படுவார். அதன் பின்னர் பதவி ஏற்பு விழா தொடங்கும். குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு திரௌபதி முர்மு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அவருக்கு வழங்கப்படும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? - தொல்.திருமாவளவன் காட்டம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
President Draupadi Murmu was made to stand while presenting the award to Advani

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று முன்தினம் (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வின்போது அத்வானி அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பது போன்றும், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நிற்பது போன்று புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த விசிக தலைவர் திருமாவளவன், “பிரதமர், மேனாள் துணைப் பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?  

தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா? இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது  இவர் பழங்குடி என்பதாலா? அல்லது  அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்க வைத்து படம்பிடித்து வெளியிடுவது என்ன வகை பண்பாடு?  பெரும் அதிர்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், பாஜக ஆட்சியின் கீழ் எங்கள் குடியரசு தலைவர் மீது காட்டப்படும்   அவமரியாதை வருத்தமளிக்கிறது. நமது தேசத்தின் அரசியலமைப்புத் தலைவரைக் கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு அப்பட்டமான சான்றாக விளங்குகிறது” விமர்சித்துள்ளார்.

Next Story

ஒரே நாடு ஒரே தேர்தல்; குறைக்கப்படுகிறதா சட்டமன்ற ஆயுட்காலம்?

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Report recommendation for One Country One Election

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளது. 

அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதில் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் 2029ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு உபகரணங்கள், மனிதவளம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் நடக்கும் முதல் தேர்தலுக்கு பிறகு, அனைத்து மாநில சட்டசபைகளின் பதவிக்காலம், அடுத்த மக்களவைத் தேர்தல் வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்தப்பட்ட பின், மக்களவைத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கும் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் தயாரிக்க குழு பரிந்துரைத்துள்ளது. 

தொங்கு சட்டசபை, அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆட்சி கவிழ்ந்தால் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு இடைத் தேர்தல் நடத்தப்படும். மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்த அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. இது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒரு வேளை 2029ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படுமானால், 2026, 2027 மற்றும் 2028ல் சட்டசபைத் தேர்தலை எதிர்க்கொள்ளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 3 ஆண்டு வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.