DR Balu MP along with Union Minister of State meeting

ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே கடந்த 28 ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி 16 பேரைக் கைது செய்தனர். இதையடுத்து நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில்37மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

அதே சமயம் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கடந்த 23 ஆம் தேதி (23.10.2023) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி (28.10.2023) கடிதம் எழுதி இருந்தார். அதனைத்தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 29 ஆம் தேதி (29.10.2023) கடிதம் எழுதி இருந்தார்.

Advertisment

இந்நிலையில், தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. தலைமையிலான குழுவினர் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரனை சந்தித்துப் பேசினர். அப்போதுமாலத்தீவு மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குமுதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய இணையமைச்சரிடம் டி.ஆர். பாலு ஒப்படைத்தார். இந்த சந்திப்பின் போது ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் உடன் இருந்தனர்.