ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாதன். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் விலங்குகள் மீது பிரியம் கொள்ள ஆரம்பித்தார். இவர் குடியிருக்கும் வீட்டில் நாய் வளர்க்க தடை உள்ளதால் கடந்த இரண்டு வருடமாக கோழி ஒன்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார். அதன் மீது அவரின் மனைவியும் அலாதி பிரியம் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினரும் அதன் மீது பாசம் காட்டி, அதற்கு உணவு கொடுத்து வந்தனர். இந்நிலையில், ரகுவின் மனைவி சில நாட்களுக்கு முன் தனது தங்க கம்மலை கழட்டி வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டிற்குள் வந்த அந்த கோழி அவர் டேபிளில் வைத்திருந்த தங்க கம்மலை விழுங்கிவிட்டது.

Advertisment

g

இதை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியடைந்து தனது கணவரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். சம்பவத்தை கேட்ட ரகு, அந்த கோழியை அருகில் உள்ள ஒரு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது ரகு, தனக்கு தங்க கம்மல் முக்கியமல்ல என்றும், அதை விழுங்கியதால் கோழிக்கு எதுவும் ஆகக்கூடாது என டாக்டரிடம் கூறியுள்ளார். உடனடியாக டாக்டர் தங்க கம்மல் கோழியின் வயிற்றில் தான் உள்ளதா? என்பதை அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளார். அப்பொழுது கோழியின் இரைப்பையில் தங்க கம்மல் இருப்பது தெரிந்தது. தங்கம் கழிவுடன் சேர்ந்து வெளியே வர வாய்ப்பில்லை என்பதால், அதை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க அவர் முடிவு செய்தனர். இதையடுத்து ரகுவின் சம்மதத்துடன் கோழிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சுமார் 30 நிமிடம் தீவிர அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கோழியின் இரைப்பையில் இருந்த தங்க கம்மல் அகற்றப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கோழி அறுவை சிகிச்சையின் போதே பலியாகிவிட்டது. அறுவை சிகிச்சையின் போது கம்மல் குத்தி கோழி பலியாகிவிட்டதாக டாக்டர் ரகுவிடம் தெரிவித்தார். இதை கேட்டதும் அவர் அந்த இடத்திலேயே கதறி அழுதார். தன் குழந்தைபோல அந்த கோழியை வளர்த்ததாக அவர் கூறி அழுததை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றினார்கள்.