Do not over-prescribe antibiotics; ICMR alert

Advertisment

மக்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றுக்கே ஆன்டிபயாடிக் மருந்தினை மருத்துவர்கள் தரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர்.எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

ஆன்டிபயாடிக் மருந்துகள் உலகம் முழுவதும் மருத்துவர்களால் அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் மக்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இது தொடர்பாக கடந்த ஆண்டு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் கார்பெனம் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்து அதிகமான மக்களுக்கு பலனளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், ஆன்டிபயாடிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரலாம்.

Advertisment

லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து தருவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும்.பொதுவாக, ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை கொண்ட நோயாளிகளுக்கும் வழங்கலாம்.

பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப் பரிந்துரைக்கப்படுகிறது.