Skip to main content

“இதைக் கவனமாகக் கையாள வேண்டும்” - டி.ஆர். பாலு எம்.பி. பேட்டி!

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

dmk TR Balu MP says This needs to be handled carefully 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத கும்பல் இந்த தாக்குதலை நடத்தியிருந்ததாக இந்தியா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருந்தது. இந்தியாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (07.05.2025) நள்ளிரவு 1 மணியளவில், பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்கு செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதே சமயம், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பொதுமக்கள் உயிரிழந்ததாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் மத்திய அரசு சார்பாக இன்று (08.05.202) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குக் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரினாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டெல்லியில்  காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற்றது.  இந்நிலையில் அதனைத் தொடர்ந்து திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அரசாங்கம் நடத்துகின்ற பொழுது முக்கிய பிரச்சனை (சென்சிடிவ் இஸ்யூஸ்) குறித்து பொது வெளியில் விவாதம் செய்ய மாட்டார்கள்.

நாங்கள் கூட ஆட்சியில் இருந்திருக்கிறோம். இது மாதிரி சென்சிடிவ் விஷயம் என்று சொல்லும் போது சில விசயங்களை வெளியில் சொல்லலாம். சில விசயங்களைச் சொல்லக்கூடாது. சிலவற்றைச் சொல்லியும் சொல்லாமல் இருக்கலாம். ஆகவே இப்ப போர் நடந்துட்டு இருக்கிறது. இரண்டு  தரப்பு ராணுவமும் களத்தில் இருக்கிறார்கள். களத்தில் இருக்கின்ற பொழுது எது சொன்னாலும் தவறாகிடும். ஆகவே இதைக் கவனமாகக் கையாள வேண்டும். அந்த வகையில் இந்த அரசாங்கம் செய்கிறது சரி தான். நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று முன்னாலே நாங்கள் சொல்லி இருக்கிறோம். கடிதம் எழுதி இருக்கிறோம். இது குறித்து எல்லா கட்சியும் சொல்லி இருக்கிறது. அதே சமயம் நாடாளுமன்றம் கூட்டாமல் இருப்பதற்கான நியாயமான காரணங்களும் அரசாங்கத்திடம் இருக்கலாம். அதனால் நாடாளுமன்ற கூட்டப்படாமல் இருக்கலாம்” எனப் பேசினார்.

சார்ந்த செய்திகள்