D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

Advertisment

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத்தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

Advertisment

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத்திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.