Skip to main content

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குநர் அமீர் ஆஜர்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Director Aamir NCB OFFICE DELHI

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் (N.C.B.) இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் (02.04.2024) ஆஜராகியுள்ளார். மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வந்ததால் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்