ADVERTISEMENT

தோனி பக்கம் திரும்பிய ராம பக்தர்கள்; இன்ஸ்டாவில் பனிப்போர்

06:19 PM Jan 25, 2024 | ArunPrakash

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ரூ.2000 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில், கடந்த ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கோயிலை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்காக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பொது விடுமுறையும் சத்தீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு முழுநாள் விடுமுறையும், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், ஹரியானா, ஒடிஷா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அரைநாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இப்படி மாநிலங்களில் பொது விடுமுறை, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கி திறக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியாவிலுள்ள பிரபல சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று சிலர் பங்கேற்றனர், சிலர் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

அந்தவகையில், கோலிவுட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், டோலிவுட்டிலிருந்து நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் ஆகியோரும், பாலிவுட்டிலிருந்து ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். கிரிக்கெட் நட்சத்திரங்களான ஜடேஜா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்து கொள்ளவில்லை. இதனால், ராம பக்தர்கள் தோனியை விமர்சித்து வருகின்றனர்.

தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதியாக தனது பிறந்தநாளான ஜூலை 7 அன்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் கமெண்டில், ராம பக்தர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், தோனியின் ரசிகர்கள் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர், ‘கோயிலுக்குச் செல்வது தோனியின் தனிப்பட்ட சொந்த முடிவு’ என பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT