ADVERTISEMENT

"இது மத்திய அரசின் நியாயமற்ற சிந்தனை" -முன்னாள் பிரதமர் தேவகவுடா விமர்சனம்...

02:43 PM Aug 31, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டும் விதமாக மாநிலங்கள் ரிசர்வ் வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருப்பது நியாயமற்ற சிந்தனை என முன்னாள் பிரதமர் தேவகவுடா விமர்சித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்" எனக் குறிப்பிட்டார். மேலும், கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மூன்று லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பை ஈடுகட்ட மாநில அரசுகளுக்கு இரண்டு தெரிவுகளை அவர் வழங்கினார். அதன்படி, மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்று, வரி வருவாய் அதிகரித்த பின்னர் அதனைத் திருப்பி செலுத்தலாம் அல்லது மாநில அரசுகளே பற்றாக்குறை தொகையை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடா, "மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவு ஏற்கெனவே சிக்கலாக இருக்கும் நிலையில், கடந்த வாரம் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்துக்குப் பின் இன்னும் மோசமடைந்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி வருவாயில் ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை இருப்பதால் இழப்பீடு வழங்க இயலாது. ஆதலால், மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருப்பது சரியானது அல்ல.

ஏற்கெனவே மாநிலங்கள் பெரும் நிதி பற்றாக்குறையில் சிக்கி திணறி வருகின்றன. இந்த சூழலில் மாநில அரசுகளை ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறக்கூறுவது நியாயமற்ற சிந்தனை. ஏனென்றால், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்கள் தங்கள் வரிவிதிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்து, ஜிஎஸ்டி வரி முறைக்கு மாறின என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வரி வருவாயில் ஏற்படும் இழப்புகளுக்கு போதுமான இழப்பீடு தரப்படும் என மத்திய அரசு அளித்த உறுதியை நம்பியே ஜிஎஸ்டி வரி முறைக்கு மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. மாநிலங்களுக்கு தேவையான கடன் வழங்குவதற்கும், இழப்பை ஈடு செய்யவும் மத்திய அரசுக்குத்தான் பொறுப்பு இருக்கிறது. இப்படிச் செய்து மத்திய அரசு பொறுப்பை சுருக்கிக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT