Demand for resignation for Assam governor engaged in election campaign at rajasthan

Advertisment

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கி எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அசாம் ஆளுநர் குலாம்சந்த் கட்டாரியா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ராஜஸ்தான் மாநில திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இருகட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், குடியரசுத்தலைவரும், தேர்தல் ஆணையமும் இதில் தலையிட்டு அசாம் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த இருகட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளது.

Advertisment

இது குறித்து ஆம் ஆத்மி ராஜஸ்தான் மாநிலத் தலைவர் பாபென் சவுத்ரி கூறியதாவது, “அசாம் ஆளுநர் தனது நாற்காலியின் கண்ணியத்தை வீழ்த்தியுள்ளார். அரசியலமைப்பு நெறிமுறைகளை பாதுகாக்கும் ஆளுநர், அதற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடமும், குடியரசுத் தலைவரிடமும் புகார் அளிக்கவுள்ளோம்” என்று கூறினார்.