/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-5_111.jpg)
டெல்லியின் நஜாப்கர் நகரின் மிட்ரான் கிராமத்தைச் சேர்ந்த ஷகில் கெலாட்(24) அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு போட்டி தேர்வு பயிற்சிக்காக டெல்லியில் உள்ள பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தபோது, அதே வகுப்பில் படித்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த நிக்கி என்ற இளம்பெண்ணுக்கும் ஷகிலுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது பின்பு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் நொய்டாவில் படித்து போது, ஊரடங்கு காலத்தில் நொய்டாவிலேயே வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து படிப்பு முடிந்த பிறகு வர்கா பகுதியில் மீண்டும் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஷகிலுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்திருந்தனர். ஷகிலுக்கும் அந்த பெண் பிடித்துப் போக இருவருக்கும் கடந்த 10 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த நிக்கி, திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு அதவது 9 ஆம் தேதி ஷகிலை சந்தித்து, தன்னுடன் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து விட்டு என்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது சரியா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷகில், ஒயரால் நிக்கியின் கழுத்தை நெரித்துக் கொன்று தன்னுடைய உணவகத்தில் உள்ள ஃப்ரிஜ்ஜில் வைத்துள்ளார். அடுத்த நாள் தனது பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை ஷகில் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் இளம்பெண் நிக்கியை காணவில்லை என்ற புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், நிக்கி கடைசியாக ஷகிலை சந்தித்ததைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த ஷகிலிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் நிக்கியை கொலை செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு நிக்கியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ஷகிலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது அவரது காதலன் கொடூரமாகக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)