Delhi Minister says This is a victory for democracy for to get bail to arvind kejriwal

Advertisment

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு இன்று (10.05.2024) விசாராணைக்கு வந்தது. அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதே சமயம் ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளித்தும், முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உத்தரவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் உட்பட எதிர்கட்சியினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அமைச்சரான அதிஷி இன்று (10-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டும் இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் உண்மை வெற்றி பெற்றது. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் வெற்றி. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் உச்சநீதிமன்றம் முக்கியப் பங்காற்றியுள்ளது” என்று கூறினார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து பேசிய ஆம் ஆத்மி மூத்த செய்தி தொடர்பாளர் பிரியங்கா கூறுகையில், “ஜனநாயகத்தை நிலைநிறுத்திய உச்சநீதிமன்றத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மிகவும் அசாதாரண சூழ்நிலையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு. குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் உங்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்” என்று கூறினார்.