Advertisment

அங்கித் திவாரி மீது டெல்லி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Delhi Enforcement Directorate registered a case against Ankit Tiwari

Advertisment

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

அதே சமயம் அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 19 ஆம் தேதி நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு கடந்த 20 ஆம் தேதி வழங்கப்படும் என தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இதனையடுத்து அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Advertisment

இதனையடுத்து, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனுமதியின்றி ஆவணங்களை எடுத்துச் சென்றதாக காவல் ஆணையரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர்.

இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிஅளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் அங்கித் திவாரி மீது டெல்லி அமலாக்கத்துறை ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக வழக்குதொடர்புடைய அங்கித் திவாரி, தமிழக லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், லஞ்சத்தில் பங்கிட்டுக்கொண்ட அதிகாரிகள் மீதும், விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe