Skip to main content

நாடாளுமன்றத்தில் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட நபர்! - போலீஸுக்கு நீதிமன்றம் விதித்த கெடு!

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Delhi court sends Parliament attack accused Lalit Jha to 7-day police remand

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று (டிச. 13ம் தேதி) மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்.பி.க்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு உள்ளே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனோரஞ்சன் (34), சாகர் ஷர்மா (26) என்பதும் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று (14-12-23) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அந்த 4 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரினர். ஆனால், கைது செய்யப்பட்ட நால்வருக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு முன்னதாக, கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லலித் ஜா என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாகி இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் ஜாவை பிடிப்பதற்கு தொழில்நுட்ப உதவியுடன் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று (14-12-23) லலித் ஜா தானாகவே டெல்லி காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். சரணடைந்த லலித் ஜாவை கைது செய்த காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு லலித் ஜாவும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தரப்பில், “லலித் ஜா தான் இந்த சதி வேலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். லலித் ஜாவை பல்வேறு நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியுள்ளது. அதேபோல், அவரின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கைப்பற்றி அதிலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் காரணமாக இவரை விசாரிக்க எங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று வாதிடப்பட்டது. டெல்லி காவல்துறையின் முறையீட்டை கேட்ட பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் லலித் ஜாவுக்கு 7 நாட்கள் காவல் விதித்து உத்தரவிட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.