Delhi Cm atishi sit next to kejriwal's empty chair

டெல்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இரண்டாவது முறையாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததோடு ‘மக்கள் நான் நேர்மையானவன் என நினைத்தால் எனக்கு வாக்களிக்கட்டும்; அதுவரை நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன்’ எனத் தெரிவித்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து டெல்லி அமைச்சரவையின் நீர்வளத்துறை உள்ளிட்ட 14 துறைகளை கவனித்து வந்த அதிஷியை டெல்லியின் புதிய முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவுகளுடன் ஆதரவுடன் அதிஷி டெல்லியின் புதிய முதல்வராக நேற்று முன்தினம் (21-09-24) தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

Advertisment

இந்த நிலையில், இன்று (23-09-24) டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், முதல்வர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்த இருக்கையில், முதல்வர் அதிஷி அமராமல், அதை காலியாக வைத்து பக்கத்தில் வேறு ஒரு நாற்காலியில் அமர்ந்தார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் அதிஷி, “ராமாயணத்தில், ராமர் வனவாசம் சென்ற போது அவரின் காலணியை சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்தார். அதே போல், டெல்லியின் முதல்வராக நான்கு மாதங்கள் பணியாற்றுவேன். பதவி விலகியதன் மூலம் அரசியலில் கண்ணியத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவரது கண்ணியத்தை கெடுக்க பா.ஜ.க எந்தக் கல்லையும் விட்டு வைக்கவில்லை. பிப்ரவரி தேர்தலில் கெஜ்ரிவாலை மக்கள் மீண்டும் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். அதுவரை அவரது நாற்காலி முதல்வர் அலுவலகத்தில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment