/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/indigo-ni.jpg)
டெல்லியில் சமீப காலமாகக் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (14-01-24)பனிமூட்டம் காரணமாக 150க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரத்தாமதத்துக்குப் பின்னே இயக்கப்பட்டன. மேலும், சென்னை, கேரளா, பெங்களூரிலிருந்து புறப்படும் விமானங்களும் பனியால் திட்டமிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு டெல்லியிலிருந்து கோவாவுக்கு இண்டிகோ விமானம் புறப்படத்தயாராக இருந்தது. ஆனால், அங்கு ஏற்பட்ட கடும் பனிமூட்டத்தால் விமானம் புறப்பட 10 மணி நேரம் காலதாமதம் ஆனது. இதனால், பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர். அதன் பின்னர், மாலை 6 மணிக்கு விமானம் புறப்படத்தயாரானது. ஆனால், அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விமானம் புறப்படுவதற்கு மீண்டும் தாமதமானது.
விமானம் புறப்படத்தாமதமாவது குறித்து துணை விமானி ஒருவர், அங்கிருந்த பயணிகளிடம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதில், ஆத்திரமடைந்த பயணிகளில் ஒருவர், துணை விமானி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதைப் பார்த்து சக பயணிகளும், விமானப் பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை, அங்கிருந்த மற்றொரு பயணி ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் போலீசுக்கு புகாரளித்தனர். விசாரணையில், தாக்குதல் நடத்திய அந்த பயணி, சஹில் கதாரியா என்பது தெரியவந்தது. இதையடுத்து, சஹில் கதாரியாவை போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, விமான ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)