
புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சரின் வீடு என தொடர்ச்சியாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாகவே புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்திருந்தது. ஆனால் சோதனையில் அது போலி என்பது தெரிந்தது. தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் மிரட்டல் போலியானது என தெரியவந்தது.
அதேபோல புதுவை முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்த நிலையில் அங்கும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். ஆனால் அதுவும் போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது. இப்படியாக தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் மின்னணு சாதனங்கள் மூலம் வதந்தி பரப்புவது; மிரட்டல் கொடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரட்டல் வந்திருந்த இ-மெயில் ஐடியை ஆய்வு செய்ததில் டார்க் நெட்டை பயன்படுத்தி மர்ம நபர் மிரட்டல்களை விடுத்தது தெரியவந்துள்ளது. எனவே இதில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைந்த மையத்தின் உதவியை கோரியுள்ளது. தொடர்ச்சியாக புதுச்சேரியில் வெடிகுண்டு மிரட்டல்கள் வெளியாகி வரும் நிலையில் டார்க் நெட்டை பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடும் மர்ம நபரை நெருங்க முடியாமல் போலீசார் தவித்து வருவது குறிப்பிடத்தந்தது.