ADVERTISEMENT

"பசியால் இறந்துவிடுவோம்" - சொந்த மாநிலத்திற்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் கூலித் தொழிலாளிகள்...

12:55 PM Mar 26, 2020 | kirubahar@nakk…

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், வேலை இல்லாமல் பசியால் இறந்துவிடுவோம் என்ற பயத்தால் டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு நடைபயணமாகச் செல்கின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் தங்கி வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் பலர் அச்சம் காரணமாக தங்கள் அந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் தங்கியிருந்து கூலி வேலை பார்க்கும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி வருகின்றனர். போக்குவரத்துக்கு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தங்களது குழந்தைகள் மற்றும் சுமைகளைத் தலையில் சுமந்தபடி அவர்கள் நடைபயணமாக உத்தரப்பிரதேசம் திரும்பி வருகின்றனர்.

ஊரடங்கை முன்னிட்டு, கூலித் தொழிலாளிகளுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை, வீடு இல்லாதவர்களுக்கு முகாம்கள் என டெல்லி அரசு பல சலுகைகளை வழங்கி வந்தாலும், அடுத்த சில வாரங்களுக்கு வேலை இருக்காது எனக்கூறி மக்கள் தங்களது ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆபத்தான தனது இந்த பயணம் குறித்துப் பேசிய பெண் ஒருவர், "எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காததால் எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் எதனைச் சாப்பிடுவது. இந்த நகரத்தை விட்டு வெளியேறாவிட்டால், நாங்கள் பசியாலேயே இறந்துவிடுவோம்" எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT