/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/108_46.jpg)
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நாராயணபுர பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்(27). பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் சதீஸுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மது ஸ்ரீ(25)என்ற பெண்ணுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதல் விவகாரம் மதுஸ்ரீயின் வீட்டிற்குத் தெரியவர, அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் மது ஸ்ரீரை வேறு ஊரில் இருக்கும் அவர்களது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் திடீரென மதுஸ்ரீ காணாமல் போயுள்ளார். அங்கம்பாக்கத்தில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் காதலன் சதீஸ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சதீஸை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மது ஸ்ரீ உறவினர் வீட்டிற்கு சென்ற பின்னர் நான் பார்க்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். அதனால் அவரை அனுப்பி வைத்த போலீசார் சந்தேகத்தின் பேரில் சதீஸை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு பிறகு ஓரிரு தினங்களுக்கு முன்பு மதுஸ்ரீ சதீஸுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சதீஸை பிடித்து அவர்கள் ஸ்டைலில் விசாரித்ததில் தான் தான் காதலி மது ஸ்ரீயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், சம்பவத்தன்று தனது தோட்டத்து வீட்டிற்கு மது ஸ்ரீயை அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு மதுஸ்ரீயை அங்கேயே தங்க வைத்த நிலையில் அவர் சதீஸை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஸ் மதுஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவரது உடலைத் தோட்டத்திலேயே புதைத்துள்ளார். அதன்பிறகு உடல் எலும்புக்கூடாக மாறியதைத் தொடர்ந்து, அதனை எடுத்து வெவ்வேறு இடங்களில் புதைத்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சதீஸை கைது செய்த போலீசார், எலும்புகளைக் கைப்பற்றி மரபணு சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணம் செய்து கொள்ளக் காதலி வற்புறுத்தியதால், அவரை கொன்று புதைத்த காதலனின் செயல் அந்த பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)