Skip to main content

ராகுல்காந்தி மீது சமூக ஊடகங்களில் குவிந்த விமர்சனங்கள்! 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

 

Criticisms on Rahul Gandhi on social media!

 

ராகுல்காந்தி தொடர்பாக, பா.ஜ.க. வெளியிட்ட ஒரு வீடியோ அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, நேபாளத்தில் விடுதியில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறி வீடியோ ஒன்றை பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அமித் மாளவியா சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். 

 

இதைத் தொடர்ந்து, ராகுல்காந்தி எங்கே இருக்கிறார்? எந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் என பா.ஜ.க. வினர் சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சனங்களைக் குவித்தனர். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மத, கலவரச்சூழல் உள்ள நிலையில், ராகுல்காந்தி பார்ட்டிக் கொண்டாட்டத்தில் இருப்பதாகவும், சில விமர்சனங்கள் வந்தனர். 

 

மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்து கூட விமர்சனங்கள் எழுந்தன. பா.ஜ.க.வின் இந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடிக் கொடுத்துள்ளது. நேபாளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் திருமணத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற போது, எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறியுள்ள காங்கிரஸ் கட்சி நண்பரின் திருமணத்தில் பங்கேற்பது ஒரு குற்றமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. 

 

பா.ஜ.க.வின் செயல்பாடுகளைப் பார்த்தால், நண்பர்களைக் கொண்டிருப்பதும், அவர்களது திருமணங்களில் கலந்து கொள்வதும் சட்ட விரோதம் என நாளையே அறிவித்துவிடுவார்கள் போல உள்ளது என்றும் காங்கிரஸ் கட்டமாக விமர்சித்துள்ளது. ராகுல்காந்தியின் தனிப்பட்ட நிகழ்ச்சியைக் கூட தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா சாடியுள்ளார். 

 

இதற்கிடையே, தனது மகளின் திருமணத்திற்காக ராகுல்காந்தியை அழைத்ததாக மியான்மருக்கான நேபாள நாட்டு தூதர் விளக்கம் அளித்துள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.